உபதேசப் படலம்

தட்சகாண்டம்

1.உபதேசப் படலம்

மாயையின் வலியோ னாகி மான்முத லோரை வென்றே
யாயிரத் தோரெட் டண்ட மரசுசெய் துகநூற் றெட்டுக்
காயம தழிவின் றாகிக் கடவுளரக் கலக்கண் செயத்
தீயசூர் முதலைச் செற்ற குமரன்றாள் சென்னி வைப்பாம் (1)

மாயையின் வலியோனாகி-மாயைச் சார்பாலெய்திய வன்மை உடைய னாய், மால் முதலோரை வென்று-திருமால் முதலிய தேவர்களையெல்லாம் வெற்றிகொண்டு, நூற்றெட்டுகம் – நூற்றெட்டு உககாலம், ஆயிரத்தோ ரெட்டு அண்டம் அரசு செய்து-ஆயிரத்தெட்டு அண்டங்களை அரசுபுரிந்து, காயம் அழிவது இன்று ஆகி – சாரீரம் அழிவது இல்லையாய், கடவுளர்க்கு அலக்கண் செய்த -தேவர்களுக்கு துன்பம் விளைத்த, தீயசூர் முதலைச் செற்ற-தீமையை உடைய சூரபன்மனாகிய முதல்வனை அழித்த, குமரன் தாள் சென்னி வைப்பாம்-குமரக்கடவுளின் பாதங்களைச் சிரமேற்கொண்டு வணங்குவாம்.

உலகினுண் மேல தாகி யோங்குபே ரொளியாய் வான்மேற்
றலைமைய தாகி வைகுஞ் சத்திய வுலகந் தன்னிற்
புலனுணர் முனிவர் தேவர் புதல்வர்கள் புடையிற் போற்ற
மலரயன் றனது கோயின் மன்றில்வீற் றிருந்தா னன்றே (2)

உலகின் மேல தாகி – உலகங்ளுள்ளே மெலானதாய், ஓங்கு பேரோளி யாய் – வளர்கின்ற பேரொளியை உடையதாய், வான் மேல் தலைமையதாகி – பூலோகத்துக்கு மேலெயுள்ள வான உலகங்களுக்குள்ளே முதன்மையான தாய், வைகும் – இருக்கின்ற, சத்திய உலகந் தன்னில் – சத்திய உலகத்தில், புலன் உணர் முனிவர் – ஐம்புலன்களின் போக்கை உணர்ந்த முனிவர் களும், தேவர் – தேவர்களும், புதல்வர்கள் – உபப்பிரமர்களாகிய புதல்வர் களும்,

புடையிற் போற்ற – இரு பக்கத்திலும் துதிசெய்ய, மலரயன் தாமரையாசனரான பிரமதேவர், தனது கோயில் மன்றில் வீற்றிருந்தான் – தமது கோயிலிலுள்ள மண்டபத்தில் வீற்றிருந்தார்.

இருந்திடு காலை வேதா யாவையு மணிப்ப மேனாட்
டெரிந்தருள் பதின்ம ராகுஞ் சீர்கெழு குமரர் தம்முட்
பொருந்திய தக்க னென்னும் புந்தியின் மேலோன் முன்செய்
அருந்தவ நெறியா லீதொன் றையனை வினவ லுற்றான். (3)

வேதா இருந்திடு காலை – பிரமதேவர் அவ்வாறு வீற்றிருந்த போது, யாவையும் அளிப்ப – அனைத்தையும் படைத்தலாகிய தொழிலைச் செய்யும் பொருட்டு, மேனாள் தெரிந்து அருள் – முன்னாளிற் சிந்தித்துத் பெற்ற, சீர்கெழு பதின்ப ராகும் குமரர் தம்முள் – சிறப்பு வாய்ந்த பதின்மர் புதல்வர்களுள், பொருந்திய தக்கன் என்னும் புந்தியின் மேலோன் – ஆண்டு வதித்த தக்கன் என்னும் அறிவால் மிக்கோன், முன்செய் அருந்தவ நெறி யால் – முன்னர் செய்து வைத்த அரிய தவநெறி காரணமாக, ஐயனை – தந்தையாகிய பிரமதேவரை, ஈது ஒன்று வினவல் உற்றான் – பின்வருவதோர் ஐயத்தை வினவினான்.

தேவரின் முதல்வ ராகிச் சிற்குணத் தலைவ ராகி
மூவரி லுயர்ந்தோ ராகி முடிவிலா வொருவராகி
யோவற வுயிர்க டோறு முயிரென வுறைவோ ராகி
மேவினர் தம்மைத் தேற விளம்புதி மேலோ யென்றான்.(4)

தேவரின் முதல்வர் ஆகி – தேவர்களின் தலைவராய், சிற்குணத் தலை வர் ஆகி – ஞான குண முதல்வராய், மூவரில் உயர்ந்தோர் ஆகி – மும் மூர்த்திகளில் உயர்ந்தவராய், முடிவிலா ஒருவர் ஆகி – இறுதியில்லாத ஏக வஸ்துவாய், உயிர்கள் தோறும் உயிர் என – உயிர்கள் தோறும் உயிர்க் குயிராய், ஓவு அற உறைவோவராகி – அவ்வுயிர்களை எக்காலத்திலாயினும் நீக்குதலின்றிக் கலந்துறைவோராய், மேவினர்

தம்மை – இருப்பவராகிய முழுமுதற் கடவுளை, தேற – இவர் என்று தெளிவுபெற, மேலாய் விளம்புதி என்றான் – மேன்மை பொருந்திய பிதாவே உபதேசித்தருளுக என்று தக்கன் வினவினான்.

என்றுதன் மைந்தனிவ்வா றியம்பலும் மலரோன் கேளா
நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் றானும் யானு
மன்றம ரியற்று மெல்லை யழலென வெழுந்து வானிற்
சென்றதோர் சிவனே யார்க்கு மேலவன் றெளிநீ யென்றான்.(5)

என்று இவ்வாறு தன் மைந்தன் இயம்பலும் – என்றிங்ஙனம் தம்புதல்வ னாகிய தக்கன் வினவ, மலரோன் கேளா – பிரமதேவர் கேட்டு, இது நன்று – நீ வினவிய இது நன்று; மொழிவன் கேட்டி – உனது வினாவுக்கு விடை கூறுவேன் கேட்பாயாக; நாரணன் தானும் யானும் – விஷ்ணுவும் பிரமனாகிய நானும், அன்று அமர் இயற்றும் எல்லை – அன்றொருநாள் முழு முதற் பரம்பொருளை நிச்சயிக்கும் பொருட்டுப் போரிடும்போது, அழல் என எழுந்து – பரம்பொருள் அக்கினி வடிவாய் நமக்கு மத்தியில் எழுந்து, சென்றது – வான்மேற் சென்றது; ஓர் – இச் சம்பவத்தை நீ ஓர்வா யாக; சிவனே-முழுமுதற் பரம்பொருள் சிவபெருமானேயாம்; யார்க்கும் மேலவன் – அச் சிவபெருமானே இருவர்க்கும் மூவர்க்கும் யாவர்க்கும் மேலானவர்; நீ தெளி என்றான் – தக்கனே நீ திருபு ஐயம் இன்றித் தெளி வாயாக என்று உபதேசித்தார்.

தருசெயல் வல்லோ னீது சாற்றலுஞ் செயலோர் மூன்றி
னிருசெயல் புரிய நீவி ரேதில ராகப் பின்ன
ரொருசெயல் புரியு மீச நுங்களுக் கிறைவ னாகி
வருசெய லெனனே சிந்தை மயக்கற வுரைத்தி யென்றான். (6)

தருசெயல் வல்லோன் – சிருட்டித் தொழிலில் வல்லோரான பிரமதேவர், ஈது சாற்றலும் – பரம்பொருள் சிவபெருமானே என்கின்ற இந்த உண்மையை எடுத்து உபதேசித்தலும், செயல் ஓர் மூன்றின் – முத்தொழில்களில், இரு செயல் புரியும் நீவிர்-படைத்தல் காத்தலாகிய

தொழில்களைச் செய்யும் பிரம விஷ்ணுக்களாகிய நீவிர், ஏதிலர் ஆக – தலைமையின்றி அயலோராக, பின்னர் – படைத்தல் காத்தல் ஆகிய தொழில்களுக்குப் பின்னர் நிகழ்வதாகிய, ஒரு செயல் புரியும் – அழித்தல் என்கின்ற செயலைச் செய்கின்ற , ஈசன் – உருத்திரர், உங்களுக்கு இறைவனாகி வருசெயல் என் – உங்கள் இருவருக்குந் தலைவராகி வந்த காரணம் என்னை, சிந்தை மயக்கு அற – மனமயக்கம் நீங்க, உரைத்தி என்றான் – உபதேசித்தருள்வாயாக என்று வினவினான்.

தற்புகழ் கருத்தின் மிக்க தக்கனீ துரைத்த லோடுஞ்
சிற்பர நிலைமை யன்னா னருளினாற் றெரிந்த வேதாச்
சொற்படு மறைகண் முன்னீ துகளறக் கற்றுத் தூய
நற்பொரு டெரிந்த வாறு நன்றுநன் றென்ன நக்கான். (7)

தன் புகழ் கருத்தின் மிக்க தக்கன் – பிதாவாகிய தம்மைப் புகழுங் கருத்தில் மிகுதிப்பாடு கொண்ட தக்கன், ஈது உரைத்தலோடும் – ஈசனை இகழும் குறிப்பில் இதனை உரைத்தவுடனே, சிற்பரன் நிலைமை – சிவபெரு மானின் இயல்புகளை, அன்னான் அருளினால் தெரிந்த வேதா – அப்பெருமானின் திருவருளால் உணர்ந்த பிரமதேவர், நீ – தக்கனே நீ, சொல்படு மறை கள் – குரு சீட முறையிற் சொல்லப்பட்டு வருகின்ற வேதங்களை, முன் – முன்னர், துகள் அற கற்று – கசடறக் கற்று, தூய நல் பொருள் தெரிந்த வாறு – தூய்மையுடைய நன்மையாகிய மெய்ப்பொருளைத் தெளிந்தவாறு, நன்று நன்று என்ன நக்கான் – நல்லது நல்லது என்று கூறிச் சிரித்தார்.

பின்னுற முடிப்பான் றன்னைப் பிரானெனத் தேற்றுந் தன்மை யென்னென வுரைத்தி மைந்த வெங்களைச் சுரனை யேனைத் துன்னிய வுயிர்க டம்மைத் தொலைவுசெய் திடுவ னீற்றி லன்னவ னென்னின் முன்ன மளித்தவ னவனே யன்றோ. (8)

பின் – சங்கார காலத்தில், உற முடிப்பான் தன்னை – அனைத் தையுஞ் சங்கரிப்பவரான உருத்திரக் கடவுளை, பிரான் எனத் தேற்றுந் தன்மை – தலைமைக் கடவுள் என்று தெளிவிக்கும் இயல்பு, என் என உரைத்தி – என்னை என வினவினை, மைந்த – மகனே, எங்களை – பிரம விஷணுக்களாகிய எங்களையும், சுரரை – இந்திரன் முதலிய தேவர்களையும், ஏனைத்துன்னிய உயிர்கள் தம்மை – மற்றைய செறிந்த உயிர்வர்க்கங்களையும், ஈற்றில் – சங்கார காலத்தில், தொலைவு செய்திடுவன் அன்னவன் – சங்கரித்தருளுபவர் அவ் வுருத்திரரேயாவர், என்னின் – இங்கனம் இருந்தவாற்றால், முன்னம் – சிருட்டி யாரம்ப காலத்திலே, அளித்தவன் – சிருட்டி செய்தருளியவரும், அவனே அன்றோ – அந்த உருத்திரக் கடவுவேயாவார் அன்றோ.

அந்தநா ளொருவ னாகி யாருயிர்த் தொகையைத் தொன்னாள்
வந்தவா றொடுங்க்ச் செய்து மன்னியே மீட்டு மன்னை தந்தையா
யுரிக்கட் கேற்ற தனுமுத லளிக்கு முக்க ணெந்தைதன் செய்கை முற்று
மிலையதென் றிசைக்கற் பாற்றோ (9)

அந்த நாள் ஒருவன் ஆகி – அந்தச் சங்கார காலத்தில் தாம் ஒருவரே யாய், ஆர் உயிர்த் தொகையை – அரிய உயிர்க்கூட்டத்தை, தொன்னாள் வந்தவாறு – சிருட்டி யாரம்ப காலத்திலே தோன்றியவாறு, ஒடுங்கச் செய்து – ஒடுங்கும்படி செய்து, மன்னி – அந்நிலைக்கேற்றவாறு நிலைபெற்று, மீட்டும் – பின்னரும், அன்னை தந்தையாய் – அன்னையும் பிதாவுமாய், உயிர் கட்கு ஏற்ற தனுமுதல் அளிக்கும் – உயிர்களுக்கு அவற்றின் வினைக்கு ஏற்ற உடல் முதலியவைகளை அளித்தருளுவர்; முக்கண் எந்தை தன் செய்கை முற்றும் – முக்கண்ணராகிய எம்பெருமானுடைய செயல் அனைத்தையும், இனையதென்று – தனித்தனி இத்தகையது இத்தகையது என்று, இசைக்கற் பாற்றோ – இயம்புதல் கூடுமோ.

செங்கண்மா றன்னை யென்னைத் திண்டிறன் மொய்ம்பி னல்கி
யங்கண்மா ஞாலங் காப்பு மளிப்பது முதவி யாமு
முங்கள்பா லிருத்த மென்றெம் முயிருணின் றியன்றா நின்றா
னெங்களான் முடியுஞ் செய்கை யாவது மில்லை கண்டாய் (10)

செங்கண்மால் தன்னை – சிவந்த கண்களையுடைய திருமாலையும், என்னை – பிரமனாகிய என்னையும், திண் திறல் மொய்ம்பின் நல்லி – திண்ணிய திறல் அமைந்த தமது புயங்களிலிருந்து சிருட்டி செய்து, அங்கண் மா ஞாலம் காப்பும் அளிப்பதும் உதவி – அழகிய இடமகன்ற பெரிய உலகத்தைக் காத் தலும் படைத்தலுமாகிய தொழில்களை எங்களுக்கு அருளி, யாமும் உங்கள்பால் இருந்தும் – யாமும் உங்களை விலகாமல் உங்கள்பால் இருப் போம், என்று – என்று கூரியருளி, எம் உயிருள் நின்று – எங்கள் உயிர்க ளுள்ளே உயிர்க்குயிராய் நின்று, இயற்றாநின்றான் – எமது தொழில்களா கிய படைத்தல் காத்தல்களையும் அப்பெருமானே இயற்றி அருளுகின்றார்; எங்களால் முடியும் செய்கை யாவதும் இல்லை – அப்பெருமானை விலகி எங்களால் முடியுஞ் செயல் யாதொன்று மில்லை.

உயிருணின் றியற்ற லன்றி யுற்றநஞ் சிந்தை யுள்ளு
மியன்முறை வழாது காப்போ நிருவிழி யகத்து மானான்
மயலுறு பொழுது மெம்பால் வந்தருள் செய்வன் றானோர்
செயல்புரி கின்றான் போல வெம்பொடு செறிவ னன்றே.(11)

இயல் முறை – தம் இயல்பாகிய முறாயான, வழாது காப்போன் – தவறுதலின்றி எவ்வுயிர்களையுங் காத்தருள்பவராகிய முதல்வர், நம் உயிருள் நின்று இயற்றல் அன்றி – பிரம விஷ்ணுக்களாகிய நமது உயிருக் குள்ளே உயிர்க்குயிராய்க் கலந்து நின்று நமது தொழில்களைச் செய்து வைத்தலன்றி, உற்ற – கருவியாய்ப் பொருந்திய, நம் சிந்தனையுள்ளும் இருவிழி அகத்தும் ஆனான் – நமது மனத்துள்ளும் இரண்டாகிய கண்ணுக் குள்ளும் கலந்து நின்று சிந்தித்தல் கண்டால் ஆகிய தொழில்களைச் செய் வதற்கும் இன்றியமையாதவராயினார்; மயல் உறு பொழுதும் – முக்குண வயத்தான் நாம் மயக்கமுறுங் காலத்தும், எம்பால் வந்து அருள் செய்வன் – எம்மிடத்து வெளிப்பட்டு அருள் புரிவார்; தான் ஒர் செயல் புரிகின்றான் போல – (இவ்வாறு முத்தொழிலுக்கும் முழுமுதற் கர்த்தாவா யிருந்து கொண்டே) தாம் ஒரு செயலாகிய அழித்தலை மாத்திரஞ் செய்தருளு பவர் போல, எம்மொடு செறிவன் – பிரம் விஷ்ணு உருத்திரர் என எமது வரிசையிலும் வைத்தெண்ணப்படுவார்.

எள்ளுறு மெண்ணெ யென்ன வெறிமணி யரவ மென்னக்
கள்ளுறு போது கான்ற கடியெனச் சலாகை தன்னிற்
றள்ளுற வரிய சோதி தானென வுலக மெங்கு
முள்ளொடு புறமு மாகி யொருமையாற் பரவு மன்றே. (12)

எள்உறும் எண்ணெய் என்ன – எள்ளிற் பொருந்திய நெய்யைப் போலவும், எறி மணி அரவம் என்ன – அடிக்கப்படுகின்ற மணியில் எழும் ஓசை போலவும், கள்ளுறு போது கான்ற கடி என – தேன் பொருந்திய மலரில் அது கான்ற மணம் போலவும், சலாகை தன்னில் – இரத்தினத்தில், தள்ளுற அரிய சோதி தான் என – நீங்கலாகாத சோதி போலவும், உலகம் எங்கும் – உலகம் முழுவதிலும், உள்ளொடு புறமும் ஆகி – உள்ளும் புறமு மாய், ஒருமையால் பரவும் – பிரிவில்லாத ஒருமைப்பாட்டால் வியாபித்து நின்றருளுவர்.

வேதமே முதலா வுள்ள வியன்கலை யனைத்துந் தொன்னா
ளோதினா னவனே யெங்கட் குரைத்திட வுணர்ந்தா மன்றே யீதுநீ
யவற்றிற் காண்டி யாருமொன் றாகக் கொண்டாய் பேதையோ பெரிது
மென்னப் பிதாமக னினைய சொற்றான் 13

வேதமே முதலா உள்ள வியன் கலை அனைத்தும் – வேதம் முதலிய பெரிய கலைக ளனைத்தையும், தொன்னாள் ஓதினான் அவனே – சிருட்டி ஆரம்ப காலத்தில் ஓதியருளியவர் அப் பரம்பொருளே யாவர்; எங்கட்கு உரைத்திட உணர்ந்தாம் – அப் பரம்பொருளே அவ் வேதங்களை எங்களுக்கு உபதேசிக்க நாங்கள் உணர்ந்தோம்; ஈது நீ அவற்றில் காண்டி – இந்த உண்மையை நீ அவ்வேதங்களிற் காண்பாயாக; யாரும் ஒன்றாகக் கொண் டாய் – நீயோ பரம்பொருளையும் அகப்படுத்தி யாவரையும் ஒன்றாக மதித் தாய்; ஓ பெரிதும் பேதை – தக்கனே நீ பெரிதும் பேதையாயினாய்; என்ன பிதாமகன் இனைய சொற்றான் – என்று பிரமதேவர் இவ்வாறு கூறினார்.

அவனிது புகற லோடு மருண்மக நிசைப்பான் மேலோஞ்
சிவனருள் வேதம் பூதத் திறத்தையு முயிர்க ளோடு
மெவரையும் பிரம மென்றே யிசைப்பதென் னெனது நெஞ்சங்
கவலுறு கின்ற தெந்தை கழறுதி கடிதி னென்றான். 14

அவன் இது புகல்தலோடும் – பிரமதேவர் இவ்வாறு கூறியவுடனே, அருள் மகன் இசைப்பான் – பிரமதேவர் பெற்ற புதல்வனாகிய தக்கன் கூறுவான், மேலாம் சிவன் அருள் வேதம் – முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமான் அருளிய வேதம், உயிர்களோடும் பூதத் திறத்தையும் – உயிர் களையும் பஞ்சபூதங்களையும், எவரையும் – யாவரையும், பிரமம் என்றே இசைப்பதென் – பிரமம் என்றே ஆங்காங்கே எடுத்துச் சொல்லுவதென்னை; எனது நெஞ்சம் கவல் உறுகின்றது – எனது மனம் பிரம நிச்சயம் பெறாது கவற்சி உறுகின்றது; எந்தை கடிது கழறுதி என்றான் – என் பிதாவே விரைவாக எனது ஐயத்தைத் தெளிவிப்பாயாக என்றான்.

என்னலுங் கமலத் தண்ண லியாவருந் தெரித றேற்றா
வுன்னரும் பெற்றி யீதென் றுணர்தரக் கேட்டி யன்னான்
சொன்னதோர் மறைக டம்மிற் றுணிபுகே ளிறுதி யில்லா
முனவற் காத லுண்மை யொழிந்தன முகம னாமால் 15

என்னலும் – என்று தக்கன் வினவ, கமலத்து அண்ணல் – தாமரை ஆசனரான பிரமதேவர் கூறுவார், யாவரும் தெரிதல் தேற்றா – எவரானும் உணர்தற்கு முடியாத, உன்னரும் பெற்றி – நினைத்தற்கரிய வேதக் கருத்தி னியல்பை, ஈது என்று உணர்தரக் கேட்டி – இஃது என்று நீ உணரும்படி கூறுவேன் கேட்பாயாக; அன்னான் சொன்னது ஓர் மறைகள் தம்மில் துணிபு கேள் – அச் சிவபெருமானாற் சொல்லப்பட்டனவும் ஓர்ந்துணரற் பாலனவுமான வேதங்களில் முடிந்த முடிபாகிய வேதக்கருத்தை உற்றுக் கேள்; இறுதி இல்லாத முன்னவற்கு – இறுதியில்லாத முதல்வராகிய சிவபெருமானுக்கு, ஆதல் உண்மை – சிவமே பரப்பிரமம் என்னுங் கூற்று இயைபுடைத்தாதல் சத்தியம்; ஒழிந்தன முகமன் ஆம் – எவரையும் எவற் றையும் பிரமம் என்று கூறுவன அனைத்தும் உபசாரமாம் என்க.

ஆதலால லீச னல்லா வனைவர்க்கு முயிர்க்கு மைந்தாம்
பூதமா னவைக்கு மேற்கும் புகலுதன் முகம னாகு
மோதலா மேல தாக வொருபொருள் புகழ வேண்டின்
வேதபா ரகரை யன்றோ யானென விளம்புகின்றார்.16

ஆதலால் – உண்மையும் உபசாரமுமாகிய வேதவழக்கு இருந்தவற்றால், ஈசன் அல்லா அனைவர்க்கும் – சிவபெருமானல்லாத யாவருக்கும், உயிர்க் கும் – ஆன்மாக்களுக்கும், பூதமானவைக்கும் – பஞ்ச பூதங்களுக்கும், ஏற்றம் புகலுதல் முகமன் ஆகும் – உயர்வு கூறுதல் உபசாரமாம்; ஒரு பொருள் புகழ வேண்டின் – ஒரு பொருளைப் புகழவேண்டுமானால், மேலது ஆக ஓதலாம் – அதன் நிலையிலும் ஏற்றம் உடையதாக ஓதுதல் வழக்காம்; வேத பாரகரை – வேத முணர்ந்த பிராமணரை, யான் என அன்றோ – பிர மாக்கள் என்று என் பெயராலன்றோ, விளம்புகின்றார் – உபசரித்து வழங்கு கின்றார்கள்.

யாதொரு பொருளை யாவ ரிறைஞ்சினு மதுபோய் முக்க
ணாதியை யடையு மம்மா வங்கது போலத் தொல்லை
வேதம துரைக்க நின்ற வியன்புக ழனைத்து மேலா
நாதனை யணுகு மெல்லா நதிகளுங் கடல்சென் றென்ன. 17

யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் – யாதொரு பொருளாயிருந் தாலும் அப்பொருளை யார் வணங்கினாலும், அது முக்கண் ஆதியைப் போய் அடையும் – அவ்வணக்கம் மூன்று கண்களையுடைய முதல்வராகிய சிவபெருமானைச் சென்றடையும், அங்கு அதுபோல – அங்கு அது அடைவது போல, தொல்லை வேதம் உரைக்க நின்ற வியன்புகழ் அனைத்தும் – பழைமை யான வேதங்கள் எடுத்துரைக்கத்தக்கவாறு விளங்கி நின்ற பெரிய புகழ் அனைத்தும், எல்லா நதிகளும் கடல் சென்றென்ன – எல்லா நதிகளும் கடலை அடைந்தாலொப்ப, மேலாம் நாதனை அணுகும் – முதல்வராகிய சிவபெரு மானை அடையும்.

கேளினி மைந்த வேதக் கிளையெலா மியம்பு கின்ற
சூழுரை சிவனே யெல்லாந் தோற்றுவித் தளித்து மாற்றி
மீளவும் தருகின் றானும் வியனுயிர்க் கருளை நல்கி
யாளுநா யகனு மாதி யந்தமில லோனு மென்னும். 18

இனி – முழுமுதல்வன் இயல்பு இருந்தபடி இங்ஙனமாதலின் இனி, மைந்த – மகனே, வேதக் கிளை எல்லாம் இயம்புகின்ற சூள் உரை கேள் – வேத சாகைகள் அனைத்தும் எடுத்தறைகின்ற ஆணைமொழியைக் கேட்பா யாக; எல்லாந் தோற்றுவித்து அளித்து மாற்றி – அனைத்தையும் படைத்துக் காத்து ஒடுக்கி, மீளவும் தருகின்றானும் – ஒடுக்கியவாறு மீண்டும் படைப் பவனும், வியன் உயிர்க்கு அருளை நல்கி ஆளும் நாயகனும் – பக்குவ ஆன்மாக் களுக்கு அனுக்கிரகஞ் செய்து ஆட்கொள்ளும் முதல்வனும், ஆதி அந்தம் இலோனும் – ஆதியும் அந்தமும் இல்லாதவனும், சிவனே என்னும் – அந்தச் சிவபெருமானே என்று அந்த வேத சாகைகள் மொழியும்.

அத்தனும் பகவன் றானு மருவமு மாகுஞ்
சுத்தனு முணர்தற் கொண்ணாச் சோதியு மியாண்டு மேவுஞ்
சித்தனு மாநாதி தானுந் தேவர்க் டேவு மென்று
நித்தனு முயிர்க்கு ணீங்கா நிருத்தனு மவனே யென்னும். 19

அத்தனும் – பரமபிதாவும், பகவனும் – ஆறுகுணங்களுடையானும், அரு வமும் உருவும் ஆகும் சுத்தனும் – அருவம் உருவம் அருவுருவம்

ஆகின்ற சுத்தனும், உணர்தற் கொண்ணாச் சோதியும் – அறிதற்கரிய சோதியும், யாண்டும் மேவும் சித்தனும் – எங்கும் வியாபித்திருக்கின்ற சித்துப் பொரு ளும், அநாதி தானும் – அநாதியும், தேவர்கள் தேவும் – தேவதேவும், என்றும் நித்தனும் – என்றுமுள்ள நித்தியப் பொருளும், உயிர்கள் நீங்கா நிருத்த னும் – உயிருக்குள்ளே உயிர்க்குயிராய் நீங்காது நட்டஞ் செய்வோனும், அவனே என்னும் – அந்தச் சிவபெருமானே என்றும் அந்தச் சாகைகள் இயம்பும்.

மூன்றெனு முலகந் தன்னின் முளைத்திடு பொருளை யெல்லா
மீன்றருள் புரிந்த தாதை யெனுந்திரயம் பகனும் யார்க்குஞ் ன்றென்
நிற்கின்றோனுந் தாணுவும் பரனுந் தன்னைப் ன்றவ ருயர்தோ
ரில்லாப் புங்கவன் றானு மென்னும். 20

மூன்று எனும் உலகம் தன்னில் – மூன்றாகி உலகத்துள், முளைத்திடு பொருளை எல்லாம் ஈன்று – தோன்றும் பொருள் அனைத்தையும் படைத்து, அருள்புரியும் அவற்றிற்கு அநுக்கிரகஞ் செய்கின்ற, தாதை எனும் திரயம் பகனும் – மூன்று உலகத்துக்கும் பிதா என்னும் பொருளைத் தருகின்ற திரயம் பகன் என்னும் நாமத்தையுடையவனும், யார்க்கும் சான்றென நிற்கின் றோனும் – எல்ல்லோருக்குஞ் சாட்சியாய் நிற்பவனும், தாணுவும் – அழிவற் றவனும், பரனும் – மேலானவனும், தன்னைப் போன்றவர் உயர்ந்தோர் இல்லாப் புங்கவன் தானும் – தனக்கு ஒப்பார் மிக்கார் இல்லாத சிரேட் டனும், என்னும் – அந்தச் சிவெபெருமானே என்றுங் கூறும்.

அண்ணலு மேகன் றாது மளப்பருங் குணத்தி னானுங்
கண்ணனு மயலுந் தம்மாற் காணிய நில்லான் றானும்
பெண்ணொடா ணிலிய தென்னும் பெற்றியி லோனும் யாரு
மெண்ணிய வெண்ணி யாங்கே யீபவன் றானு மென்னும். 21

அண்ணலும் – பெருமையிற் சிறந்தோனும், ஏகன்றானும் – ஏக வஸ்துவும், அளப்பு அருங் குணத்தினானும் – அளத்தற்கரிய குணம் உடையவனும், கண்ணும் அயனும் தம்மால் காணிய நில்லான் தானும் – திருமால் அயன் ஆகிய அவர்களால் தேடிக் காணுதற்கு எட்டாதவனும், பெண்ணொடு ஆண் அலி என்னும் பெற்றி இலோனும் – பெண் ஆண் அலி என்னும் தன்மை இல்லாதவனும், யாரும் எண்ணிய எண்ணியாங்கு ஈபவன் தானும் – எவரும் நினைத்தவைகளை நினைத்தவண்ணமே அளிப்பவனும், என்னும் – அச் சிவ பெருமான் என்றுங் கூறும்.

விதிமுத லுரைக்க நின்ற வியனுயிர்த் தொகைடட் கெல்லாம்
பதியென வருளுந் தொன்மைப் பசுபதி தானு மன்னோர்க்
கதிகனென் றெவருந் தேற வாங்கவர் துஞ்ச வெந்த
பொதிதரு பலியு மென்பும் புனைபவன் றானு மென்னும்.22

விதி முதல் உரைக்க நின்ற வியன் உயிர்த் தொகைகட்கு எல்லாம் – பிரமன் முதலாக எடுத்துச் சொல்லும்படி நிலைபெற்ற பெரிய உயிர்க் கூட்டம் அனைத்துக்கும், பதி என அருளும் தொன்மைப் பசுபதி தானும் – பதியாய் அருள் புரிகின்ற பழைமையாகிய பசுபதியும், அன்னோர்க்கு அதிகன் என்று எவருந் தேற – அப்பிரமனாதியருக்கு மேலானவன் என்று யாவருந் தெளிந்துணருமாறு, ஆங்கவர் துஞ்ச – அப்பிரமனாதியர் இறக்க, வெந்த பொலிதரு பதியும் – வெந்துபோன அவருடைய உடலாலானா சாம் பரும், என்பும் – அவருடைய எலும்பும், புனைந்தவன் தானும் – தரித்திருப் பவனும், என்னும் – அந்தச் சிவபெருமானே என்றுங் கூறும். பொதி – உடற்பொதி.

ஊன்புகு மெவரை யுந்தன் னெண்குணத் தொடுக்கித் தானே
வான்புக லாகி நின்று மற்றவர் குணங்க ளூடு
தான்புக லில்லா தோனுந் தன்னிய லினைய தென்றே
யான்புக லரிய தேவு மீசனு மவனே யென்னும்.23

ஊன் புகும் எவரையும் – ஊனாலாகிய உடம்புட் புகும் எவர்களையும், தன் ஓண்குணத் தொடுக்கி – தமது சிறந்த குணத்துக்குள்ளே ஒடுக்கச் செய்து, தானே வான் புகல் ஆகி நின்று – தானே யாவருக்கும் புகலிடமாகி நிலைபெற்று, அவர் குணங்கள் ஊடு தான் புகல் இல்லாதோனும் – பிறப் பெடுத்த அவர்களின் மாயா குணங்களுக்குள்ளே தான் கலத்தல் இல்லாத வனும், தன் இயல் இனையது என்று – தன்னுடைய தன்மை இத்தகையது என்று, யான் புகல் அரிய தேவும் – என்னால் உரைத்தற்கு ஏலாத தெய்வமும், ஈசனும் – தலைவனும், அவனே என்னும் – அந்தச் சிவபெருமானே என்றுங் கூறும்.

அன்றியு மொன்று கேண்மோ வம்புய னாதி யாகி
நின்றவர் தம்மை யெல்லா நீங்கியச் சிவனென் றுள்ள
வொன்றொரு முதல்வன் றானே யுய்த்திடு முத்தி வேண்டி
னென்றுமஃ தியம்பிற் றென்னின் யாவரே தேவ ராவர். 24

அன்றியும் – மேற்கூறியவற்றா னல்லாமலும், ஒன்று கேள் – முக்கியமான தொன்றைத் தக்கனே கேட்பாயாக, முத்தி வேண்டின் – ஒருவர் முத்தியை வேண்டினால், அம்புயன் ஆதி யாகி நின்றவர் தம்மை எல்லாம் நீக்கி – அம் முத்தியை நல்க வல்லார் பிரமன் முதலாகி நின்ற தேவர்கள் அல்லர் என்று அவர்களையெல்லாம் விலக்கி, சிவன் என்று உள்ள ஒன்றொரு முதல்வன் தானே உய்த்திடும் என்றும் – சிவன் என்று சொல்லப்பட்டுள்ள ஒருவன் என்னும் ஒருவனாகிய முதல்வனே முத்தியை வழங்க வல்லா னென்றும், அஃது இயம்பிற்று – அந்த வேதம் முழங்கிற்று; என்னில் – வேத முழக்கு இங்கனம் இருந்தவாற்றால், தேவர் ஆவார் யாவர் – முழுமுதற் கடவு ளாவார் யாவர் நீயே கூறுவாயாக.

பரசிவ நுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைது மென்ற
லுருவமில் விசும்பிற் றோலை யுரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை யியம்பிற் றென்னிற் பின்னுமோர் சான்று முண்டோ.25

பரசிவன் உணர்ச்சி இன்றி – பரம்பொருளாகிய சிவபெருமானை உணரும் உணர்ச்சி இல்லாமல், பல் உயிர்த் தொகையும் – பலவாகிய உயிர்க் கூட்டமும், என்றும் விரவிய துயர்க்கு ஈறு எய்தி – தம்மால் தொன்று தொட்டு விரவியதாகிய துன்பத்திற்கு இறுதி கண்டு, வீடு பேறு அடைதும் என்றல் – நாம் நமது முயற்சியினால் வீடுபேறு அடைவோம் என்று எண்ணுவதுண்டா னால் அவ்வெண்ணம், உருவம் இல் விசும்பின் தோலை உரித்து – உருவம் இல்லாத ஆகாயத்தின் தோலை உரித்து, உடுப்பதற்கு – உடுத்தல் சாலும் என்று எண்ணும் எண்ணத்துக்கு, ஒப்பு என்று பெருமறை இயம்பிற்று – ஒப்பாகும் என்று பெருமை பொருந்திய வேதம் உரைத்தது, என்னின் – வேதத்தின் கருந்து இங்ஙனமாயபோது, பின்னும் ஓர் சான்று உண்டோ – அதற்கு மேலும் ஒரு சாட்சியம் உளதாமோ.

இன்னமும் பலவுண் டன்னாற் கியம்பிய மறையின் வாய்மை
யன்னதை யெனக்கு முன்னி யறையொணா தறைவ னென்னிற்
பன்னெடுங் காலந் தேயும் பகரினும் முலவா தென்பான் முன்னமீ
துணர்ந்தா யேனு மோகமுற் றாய்கொ லையா. 26

அன்னாற்கு – அந்தச் சிவபரம்பொருளுக்கு, இயம்பிய மறையின் வாய்மை – சிவபரம்பொருள் பற்றிக் கூறிய வேத உண்மைகள், இன்னமும் பல உண்டு – மேற்காட்டியவையன்றி இன்னமும் பல உண்டு; அன்னதை – அந்த வேத உண்மையை, எனக்கும் முன்னி அறையொணாது – வேதத்துக்குரிய என்னாலும் சிந்தித்து உரைத்தல் இயலாது; அறைவன் என்னில் – ஒருவாறு உரைக்கத் தொடங்குவேன் ஆனால், பல்நெடுங் காலம் தேயும் – பலவாகிய நெடுங்காலங் கழியும்; பகரினும் உலவாது – நீண்டகாலம் சொல்லிக்கொண்டே யிருந்தாலும் பரம்பொருள் பற்றிய மெய்ம்மை முற்றுப் பெறாது; முன்னம் என்பால் ஈது உணர்ந்தாயேனும் – முன்பு என்னிடம் இந்த இரகசியத்தை நீ உணர்ந்திருந்தா யாயினும், ஐயா – அப்பனே, மோகமுற்றாய் கொல் – இப்போழுது நீ மயக்கங் கொண்டனை போலும்.

காரெழில் புரையு மேனிக் கண்ணனை யென்னைப் பின்னை
யாரையும் புகழும் வேத மரன்றனைத் துதித்த தேபோ
லோருரை விளம்பிற் றுண்டோ வுரைத்தது முகம னென்றே
பேருல கறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே. 27

கார் புரையும் எழில் மேனிக் கண்ணனை – மேகத்தை ஒத்த அழகிய திருமேனியையுடைய திருமாலையும், என்னை – பிரமனாகிய என்னையும், பின்னை யாரையும் – மற்றை இந்திரன் முதலிய தேவர்கள் யாவரையும், புகழும் வேதம் – புகழ்ந்துரைக்கின்ற வேதம், அரன் தனைத் துதித்தது போல் – சிவ பெருமானைத் துதிசெய்தது போல, ஓர் உரை விள்ம்பிற்று உண்டோ – எம்மனோரையுந் துதி செய்து ஒரு வார்தையாவது பேசியதில்லை; உரைத்தது முகமன் – எம்மனோரைப் புகழ்ந்துரைத்த துண்டானால் அது உபசாரமாம்; என்று பேருலகு அறிய – என்றிவ்வாறு பெரிய உலகம் அறியு மாறு, முன்னும் விலக்கிற்று – இறுதியிலும் எம்மை விலக்கிவைத்தது; பின்னரும் விலக்கிற்று – இறுதியிலும் எம்மை விலக்கிவைத்தது.

நான்மறை தனிலோர் பாக நாரமார் கடவுட் சென்னி
மேன்மைய தியம்பு மெம்மை விண்ணவர் தம்மை யேனைப்
பான்மைகொள் பூதந் தன்னைப் பல்பொரு டனையும் பாதி
தான்மொழிந் திடுமா லீது தவறால வுணர்தி தக்கோய். 28

நான்மறை தனில் ஓர் பாகம் – நான்கு வேதங்களில் ஒப்பில்லாத பாக மாகிய பாதி வேதம், நாரம் ஆர் சென்னிக் கடவுள் மேன்மையது இயம்பும் – கங்கையைத் தரித்த சென்னியையுடைய சிவபெருமானின் பரத்துவ நிலையை எடுத்துக் கூறும்; பாதிதான் – மிகுதியாகிய பாதி வேதந் தான், எம்மை – திருமாலைப் பற்றியும் என்னைப் பற்றியும், ஏனை விண்ணவர் தம்மை – ஏனைய தேவர்களைப் பற்றியும், பான்மை கொள் பூதந் தன்னை – தத்தம் இயல்பைப் பொருந்திய பிருதிவி முதலிய பூதங்களைப் பற்றியும், பல்பொருள் தனையும் – பூதகாரியங்களாகிய பல பொருள்களைப் பற்றியும், மொழிந்திடும் – கூறும்; ஈது தவறல – இங்ஙனமாதல் பாரபட்சமன்று; தக்கோய் உணர்தி – தக்கனே நீ சிவபரம் பொருளை அதிகரித்து நிற்கும் வேதத்தின் உண்மையை உணரக்கடவாய்.

நம்மையும் பரெமென் றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும்
வெம்மைகொ ணெஞ்சர் தீரா விழுமவெந் நிரயம் வீழ்வர்
தம்மையஃ தெடுதல் செய்யா சமமெனப் புகல்கிற் போர்க
ளெம்மையுந் துயர் மென்னு மிருங்க்டற் படுப்ப ரன்றே. 29

நம்மை பரம் என்று உன்னி – தேவர்களாகிய நம்மையும் பரம் பொருள் என்று கருதி, நாதனின் சிறப்புச் செய்யும் – நாதனாகிய பரம் பொருளுக்குச் செய்யுஞ் சிறப்புப்போல நமக்குஞ் சிறப்புச் செய்கின்ற, வெம்மை கொள் நெஞ்சர் – அறியாமையாகிய கொடுமையைக் கொண்ட மனத்தினையுடையவர்கள், தீரா விழும வெம் நிரயம் வீழ்வர் – நீங்காத துன்பத்தைச் செய்கின்ற வெவ்விய நரகத்தில் விழுவார்கள்; தம்மை அஃது எடுத்தல் செய்யா – அவர்களை அந்நரகம் கரையேற்றாது; சமம் எனப் புகல்கிற்போர்கள் – பரம்பொருளோடு எம்மையும் வலிதிற் சமஞ் செய்து கூறுபவர்கள், எம்மையும் – தம்மையேயன்றி எம்மையும், துயரம் என்னும் இரும் கடற் படுப்பர் – துன்பம் என்கின்ற பெரிய கடலிலே தள்ளுவோர் ஆவர்.

கானுறு புலித்தோ லாடைக் கண்ணுதற் கடவுட் கன்ப
ரானவ ரென்று மன்னாற் கடித்தொழில் புரிந்து வாழும்
வானவ ரென்று மெம்மை வழுத்தினர்க் கருள்வோ மல்லா
வேனையர் தம்மைத் தெவ்வேன் றெண்ணியே யிருந்தும் யாமே. 30

கான் உறு புலித்தோல் ஆடைக் கண்ணுதற் கடவுக்கு – காட்டில் வாழும் புலியின் தோலை ஆடையாகவுடைய நெற்றிக்கண்ணரான சிவபெரு மானுக்கு, அன்பர் ஆனவர் என்றும் – அன்பராய் இருப்பவர் என்றும், அன்னாற்கு அடித்தொழில் புரிந்து வாழும் வானவர் என்றும் – அச் சிவ பெருமானுக்கு அடித்தொண்டு செய்து வாழுந் தேவர்கள் என்றுங் கருதி, எம்மை வழுத்தினர்க்கு – எம்மை வணங்குகின்றவர்களுக்கு, யாம் அருள் வோம் – நாம் அவர்கள் விரும்பியவைகளை அனுக்கிரகஞ் செய்வோம்; அல்லா – அவ்வாறல்லாத, ஏனையர் தம்மை – சமத்துவ புத்திமான்களாகிய வரிசை தெரியாத மற்றையோரை, தெவ் என்றே எண்ணி இருத்தும் – நம் பகைவர் என்றே கருதுவோம்.

பதியரன் பாசந் தன்னிற் பட்டுழல் பசுநா மென்றே
விதியொடு மறைகள் கூறு மெய்ம்மையைத் தெளிய வேண்டி
னிதுவென வுரைப்பன் யாங்க ளிவ்வர சியற்ற வீச
னதிர்கழ லருச்சித் தேத்து மாலயம் பலவுங் காண்டி. 31

அரன் பதி – சிவபெருமான் முழுமுதற் கடவுளாகிய பதி; பாசம் தன்னிற் பட்டு உழல் நாம் பசு – மும்மலங்களாகிய பாசத்தாற் பிணிக்கப் பட்டு உழலுகின்ற நாம் பசு; என்று மறைகள் விதியொடு கூறும் – என் றிவ்வாறு வேதங்கள் உடன்பாட்டு வாய்ப்பாட்டானே மொழியும்; மெய்ம் மையைத் தெளிய வேண்டின் – இந்த வேத உண்மையைத் தெளிவாயறிய விரும்பினால், இது என உரைப்பன் – அதற்குரிய பிரமாணத்தை இது என்று சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறுவேன்; யாங்கள் – பிரம விஷ்ணுக்களாகி நாங்கள், இவ்வரசு இயற்றல் – படைத்தல் காத்தலாகிய இந்த உத்தி யோகத்தை இடையூறின்னி நடத்தும்பொருட்டு, ஈசன் அதிர் கழல் அருச் சித்து ஏத்தும் -சிவபெருமானுடைய ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளை அருச்சித்துத் துதிக்கின்ற, ஆலயம் பலவும் காண்டி – சிவாலயங்கள் பலவற்றையும் காண்பாயாக.

அவனருள் பெறாது முத்தி யடைந்தன ரிலை யல்லா
லவனரு ளின்றி வாழும் மமரரும் யாரு மில்லை
யவனரு ளெய்தி னெய்தா வரும்பொரு ளில்லை யாணை
யவனல திறைவ னில்லை யவனைநீ யடைதி யென்றான்.32

அவன் அருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை – சிவபெருமா னது அருளைப் பெறாமல் மோட்சமடைந்தவர்கள் இல்லை; அல்லவா – அவ்வா றல்லாமல், அவன் அருள் இன்றி – அச் சிவபெருமானது அருளின்றி, வாழும் யாரும் அமரரும் இல்லை – வாழுகின்ற யார் ஒருவர் தேவரும் இல்லை; அவன் அருள் எய்தின் – அச் சிவபெருமானது அருள் கிடைக்கப் பெற்றால், எய்தா அரும் பொருள் இல்லை – கிடையாத அரிய பொருளென்று ஒன்று இல்லை; ஆணை – இந்த வேத உண்மைகளை ஆஞ்ஞையிட்டுரைக்கின் றேன்; அவன் அல்லது இறைவன் இல்லை – இவ்வாற்றால் அச் சிவபெருமானே அல்லாமல் முதல்வர் என்று மற்றொருவரில்லை; அவனை நீ அடைதி – ஆகையினாலே அச்சிவபெருமானைச் சரண் என்று நீ அடைவாயாக, என்றான் – என்று பிரமதேவர் தக்கனுக்கு உபதேசஞ் செய்தார்.

உபதேசப் படலம் முற்றிற்து.
ஆகத் திருவிருத்தம் – 32


தட்சகாண்டம்